31 மார்., 2009

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் II

இதை கற்பனை என்கிறீர்களா? நீங்கள் இதை போல் செயல்பட மாட்டீர்களா? எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா? உண்மைதான். ஆனால் இங்கே இப்புவியில் இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இம்மூன்று கேள்விகளிலிருந்து தப்பிக்கும் போராட்டத்திலேயே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள்.

1. நான் எங்கே இருக்கிறேன்?
2. அதை நான் எப்படி அறிவது?
3. நான் என்ன செய்யவேண்டும்?

மனிதனின் எல்லா எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் அவன் தெளிவாக அறிந்திருப்பினும் இல்லையெனினும் இக்கேள்விக்கான பதில்களில்தான் அவையனைத்தும் அடங்கியிருக்கிறது.

இக்கேள்விகளை புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சியை அடையும் தருணத்தில் அதற்கான பதில்களையும் அறிந்திருப்பதாக மனிதர்கள் நம்புகிறார்கள்.

1. நான் எங்கே இருக்கிறேன்? - இந்நகரத்தில்
2. அதை நான் எப்படி அறிவது - கண்கூடாக தெரிகிறதே
3. நான் என்ன செய்ய வேண்டும்? - இங்கே தான் நிச்சயமற்றுப்போகிறார்கள். ஆனால் பொதுவான பதில் என்னவென்றால் ‘எதை எல்லோரும் செய்கிறார்களோ அதையே’

பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சுருசுருப்பாக இல்லை, திடமான நம்பிக்கையோடில்லை, சந்தோஷமாக இல்லை, சில சமயங்களில் விலகவோ விட்டுத்தொலைக்கவோ முடியாத காரணமற்ற பயத்தையும் விவரிக்கமுடியாத குற்ற உணர்வையும் அனுபவிக்கிறார்கள்.

கஷ்டங்கள் அனைத்தும் பதிலளிக்கப்படாத இம்மூன்று கேள்விகளில் இருந்து தொடங்குகிறதென்ற உண்மையை அவர்கள் எப்போதும் கண்டுணரவில்லை. ஒரே ஒரு அறிதல்முறை மட்டுமே அவர்களுக்கு பதிலை தரமுடியும் : தத்துவம் (philosophy).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக