31 மார்., 2009

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் VI

நான் இதுபோன்ற கருத்துப்பொருளைப்பற்றி (abstract) யோசிப்பதே இல்லை. எனக்கு திடமான, குறிப்பான, வாழ்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை மட்டும் கையால வேண்டும். எனக்கு எதற்கு தத்தவம் என்று பலரும் சொல்வதை போல் நீங்கள் இப்போது சொல்லக்கூடும். உங்களுக்கு என்னுடைய பதில் : திடமான, குறிப்பான, வாழ்க்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை கையாள….அதாவது இப்புவியில் வாழ முடிவதற்கு தத்துவம் அவசியமானது.

நான் எப்போதுமே தத்துவத்தால் வசப்படவில்லை என்று பலரும் இப்போது சொல்லலாம். நீங்கள் சொல்வதை சற்றே சரிபார்க்க சொல்கிறேன். எப்போதாவது இவற்றை நினைத்து அல்லது கூறி இருக்கிறீர்களா?

“இவ்வளவு நிச்சயமாக இருக்காதே…யாரும் எதைபற்றியும் நிச்சயமாக இருக்கமுடியாது”
இவ்வெண்ணம் David Hume மிடமிருந்து வந்தது (இன்னும் பலரிடத்திலிருந்தும்) அவரைப்பற்றி நீங்கள் கேள்விபட்டிராவிட்டாலும்.

அல்லது :
“இவை புத்தகங்களுக்கு ஒத்துவரும் ஆனால் நடைமுறையில் செயல்படுத்த முடியாது”
இதை Plato விடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது மிகவும் கீழ்த்தரமான செயல், ஆனால் நாம் மனிதர்கள் தானே. இவ்வுலகத்தில் எந்த ஒரு மனிதனும் உத்தமமானவன் இல்லை”
இதை Augustine னிடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“உனக்கு இது உண்மையானதாக இருக்கலாம் ஆனால் எனக்கிது உண்மையானதல்ல”
இதை William James இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“என்னால் உதவ முடியவில்லை, அவன் என்ன செய்தாலும் எவராலும் எதுவவும் உதவ முடியாது”
இதை Hegel இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது உண்மையென உணருகிறேன்…ஆனால் என்னால் நிரூபிக்க முடியவில்லை”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது நியாயமானது, ஆனால் நியாயங்கள் யதார்த்ததோடு எதுவும் செய்வதற்கில்லை”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது தன்னலம் என்பதால் இது தீயது”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

“முதலில் செயல்படுங்கள் பிறகு யோசியுங்கள்” என்று செயல்பாட்டாளர்கள் (activists) சொல்வதை கேட்டிருக்கிறீர்களா.
இதை John Dewey இடமிருந்து பொற்றார்கள்.

இப்போது சிலர் சொல்லக்கூடும் “ஆமாம் நான் இவற்றை பலசமையங்களில் சொல்லி இருக்கிறேன், ஆனால் இவற்றை நான் என்றும் நம்பவேண்டுமென்பதில்லை. நேற்று அவை சரியானதாக எனக்கு பட்டிருக்கலாம் ஆனால் இன்று அவை சரியானதல்ல” இதை Hegel இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

பலவிதமான யோசனைகளை பலவிதமான தத்துவங்களிலிருந்து அந்நேரத்திற்கு தகுந்தாற்போல் கடன் வாங்கிக்கொள்ளவோ சமாதானப்படுத்திக்கொள்ளவோ கூடாதா? என்று கேட்கலாம். இதை Richard Nixon இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்…அவர் Willam James இடமிருந்து.

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் - இதுபோன்ற கருத்துப்பொருளாகிய எண்ணங்களில் விருப்பமில்லையெனில், ஏன் அனைவரும் அவற்றை கட்டாயமாக பயன்படுத்த எண்ணுகிறீர்?

…தொடரும்

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் V

இவ்விரண்டு கிளைகளும் தத்துவத்தின் நூலறிவு (theoritical) தளங்களாகும். மூன்றாவது கிளை ‘நன்னெறி’ - தத்துவத்தின் தொழில்நுட்பம் (technology) என கருதலாம். நன்னெறி என்பது பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் பொறுந்தாது, அவை மனிதர்களுக்கு மட்டுமேயானது. மனிதனின் குணம், செயல், மதிப்பு, இருக்கும் அனைத்துடனுமான அவனின் உறவுகள் என எல்லா விதத்திலும் பிரயோகிக்கக்கூடியது. நன்னெறி இல்லது அறம் என்பது மனிதனின் விருப்பங்களையும் செயல்களையும் வழிகாட்ட விளக்கப்படும் சன்மார்கங்களாகும், அதாவது வாழ்க்கையின் முறையான பாதையை தீர்மானிக்கும் விருப்பங்களையும் செயல்களையும்.

எங்கே இருக்கின்றேன் என்பதனையும் அதை எப்படி கண்டுபிடிக்கவேண்டுமென்பதனையும் அறிந்துக்கொள்வதை தட்டிக்கழித்ததனால் என் கதையில் வரும் விண்கலவீரனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெரியாமல் போனதுபோல் நீங்கள் இருக்கும் பிரபஞ்சத்தின் இயல்பையும், அறிதலுக்குண்டான விழிகளின் இயல்பையும், உங்களின் இயல்பையும் தெரிந்துவைத்துக்கொள்ளாதவரை நீங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை தெரிந்துக்கொள்ள முடியாது.

நன்னெறிக்கு செல்லும் முன்பு metaphysics & epistemology முன்னிறுத்திய கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும் : மனிதன் பகுத்தறிவாளனா, உண்மையை கண்டறியும் தகுதி உள்ளவனா அல்லது பொருந்தாத செயலற்றப்போன குருடன், பிரபஞ்சத்தின் தொடர்மாற்றங்களால் தாக்கப்பட்ட ஒரு துகளா? மேன்மையான செயல்களும் சந்தோஷங்களும் இப்புவியில் இருக்கும் மனிதனுக்கு சாத்தியமா அல்லது அவன் தோல்விகளுக்கும் அழிவுகளுக்கும் விதிக்கப்பட்டவனா? இக்கேள்விகளுக்கான பதில்களை பொறுத்து நன்னெறி எழுப்பும் கேள்விகளை சிந்திக்க தொடங்கலாம்.

1. மனிதனுக்கு எது நல்லது? எது கெட்டது? ஏன்?
2. மனிதனின் பிரதான அக்கறை சந்தோஷத்தை தேடுவதா அல்லது கஷ்டங்களிலிருந்து தப்பித்தலா?
3. தன் வாழ்வின் இலக்காக மனிதன் எதனை வைத்துக்கொள்ளவேண்டும்…சுய நிறைவையா அல்லது சுய சிதைவையா?
4. மனிதன் தன் மதிப்பீடுகளின்படி செல்லவேண்டுமா அல்லது தன்னுடையதைவிட மற்றவர்களின் விருப்பங்களையே மேலானதாக கருத வேண்டுமா?
5. மனிதன் மகிழ்ச்சியை நாட வேண்டுமா அல்லது சுயதியாகத்தையா?

இவ்விரண்டு விதமான விடைதொகுப்புகளின் விளைவுகளின் வித்தியாசத்தை நான் சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை. இவற்றை நீங்கள் எங்கும் காணலாம் - உங்களுக்குள்ளும் உங்களைச்சுற்றியும்.

நன்னெறி அளித்த பதில்களிலிருந்து மனிதன் சக மனிதனை எவ்வாறு நடந்தவேண்டுமென்பது தீர்மானமாகிறது, இதுவே தத்துவத்தின் நான்காவது கிளையான ‘அரசியலை’ நிச்சயப்படுத்துகிறது. இது முறையான சமூக ஒழுங்கின் கொள்கைகளை விளக்குவதாகும். தத்துவ செயல்பாட்டின் உதாரணத்தை போல, அரசியல் தத்துவம் உதாரணத்துக்கு உங்களுக்கு வாரத்தில் எந்த நாளில் எவ்வளவு எரிவாய்வு வழங்கப்படவேண்டுமென்பதை கூறாது. உங்களுக்கு எதனை எவ்வளவு வழங்க வேண்டும் என்று விதிக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டா என்பதனைக்கூறும்.

முதல் மூன்று கிளைகளை சார்ந்த தத்துவத்தின் ஐந்தாவதும் கடைசி கிளையுமானது ‘அழகியல்’. இது கலையை பற்றிய ஆய்வாகும். கலை மனிதனின் தேவைகளை கையாளும்…அவனின் உணர்வினைத்தூண்டிவிடும்.

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் IV

எத்தீர்வை அடைந்திருந்தாலும் சரி, நீங்கள் மேலுமொரு தொடர்கேள்விக்கு பதிலளிக்கும் அவசியத்திற்குள்ளாவீர்கள். நான் இதை எப்படி தெரிந்துக்கொண்டேன்? மனிதன் முற்றுமுணர்ந்தவனோ, தவறிழைக்காதவனோ அல்ல என்பதால் எதனை அறிதலென காட்டப்பெறுமென்பதையும், உங்கள் தீர்வை உறுதியானதென்று எப்படி நிரூபிக்கமுடியுமென்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

1. ஒரு மனிதன் தொடர் பகுத்தறிவினால் அறிந்துக்கொள்கிறானா அல்லது தீடீரென்று அதீதசக்தியால் பெற்ற ஞானத்திலிருந்தா?

2. பகுத்தறிவென்பது மனித உணர்வுகள் தரும் தளங்களை கண்டுணரவும் பிணைக்கவும் உதவும் கரணமா அல்லது பிறப்பதற்கு முன்பே மனிதமனங்களில் ஊரிப்போன பிறவிக் குணங்களினாலா?

3. பகுத்தறிவு உண்மையை அறியும் தகுதியுடையதா அல்லது பகுத்தறிவினும் மேலான வேறு எதாவது சுட்டுணர்வை மனிதன் பெற்றிருக்கிறானா?

4. மனிதன் நிச்சயத்தன்மையை அடையமுடியுமா அல்லது அவன் நித்தம் சந்தேகத்துடனேயே இருக்க விதிக்கப்பட்டவனா?

நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பதில்களின் தொகுதிக்கேற்ப உங்கள் தன்னம்பிக்கையின் அளவும் உங்கள் வெற்றிகளும் வித்தியாசப்படும். இப்பதில்கள்தான் epistemologyயின் தளம், மனிதனின் சுட்டுணர்வு வழிகளை ஆராயும் அறிதலின் கோட்பாடு.

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் III

மனிதனின் இருத்தலுக்கான அடிப்படை இயல்பையும், இருத்தலுடனான மனிதனின் தொடர்பையும் தத்துவும் ஆராய்கிறது. விசேஷ அறிவியல் (Special Sciences) சில கூறுகளையே ஆராயும் நிலையில் தத்துவமோ பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தொடர்புள்ள கூறுகளை ஆராய்கிறது. அறிதலின் பரப்பில், விசேஷ அறிவயல் மரங்களெனில் தத்துவமோ செழிப்பான காடு உருவாகும் சாத்தியத்தை உண்டாக்கும் மண்.

உதாரணத்திற்கு தத்துவம் நீங்கள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கும் வழியை கொடுக்குமே தவிர நீங்கள் எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லாது. அவை உங்களுக்கு கூறுவது இவற்றை தான் :

1. நீங்கள் இருக்கும் பிரபஞ்சம் இயற்கைவிதிகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா…அதனால் மாற்றமுடியாததாகவும், திடமானதாகவும், நிச்சயத்தன்மையோடும் அறிந்துக்கொள்ளும்படியாகவும் இருக்கின்றதா? அல்லது வார்த்தைகளால் விளக்கமுடியாத குழப்பங்களோடு, புரிந்துக்கொள்ளமுடியாத அதிசய தேசத்தில், கணிக்கமுடியாத, அறியமுடியாத தொடர்மாற்றங்களுடன் உங்கள் மனதால் விளங்கிக்கொள்ள முடியாத இடத்தில் இருக்கின்றீகளா?

2. உங்களைச்சுற்றி நீங்கள் காணும் அனைத்தும் நிஜமானதா அல்லது அவையெல்லாம் மாயமா?

3. அவையெல்லாம் பார்வையாளனிலிருந்து தனித்து இயங்குகிறதா அல்லது பார்வையாளனால் உண்டாக்கப்பட்டதா?

4. அவை பொருளா அல்லது மனித உணர்வின் எண்ணமா?

5. அவை எப்படி இருக்கின்றதோ அப்படியேதானிருக்குமா அல்லது நம் உணர்வினால் நம் விருப்பப்படி மாற்றி அமைக்கக்கூடியதா?

நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பதில்களின் தொகுதிக்கேற்ப உங்கள் செயல்களின் இயல்பும் உங்கள் விருப்பங்களின் இயல்பும் வித்தியாசப்படும். இப்பதில்கள்தான் metaphysicsயின் தளம் - இருத்தலை உள்ளவாரே ஆராய்தல் அல்லது அரிஸ்டாடலின் வார்த்தைகளில் ‘இருப்பதை இருப்பதாகவே புரிந்து கொள்ளுதல் (being qua being) - இதுவே தத்துவத்தின் அடிப்படை கிளையாகும்.

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் II

இதை கற்பனை என்கிறீர்களா? நீங்கள் இதை போல் செயல்பட மாட்டீர்களா? எந்த விண்கலவீரரும் இதைபோல என்றுமே செயல் படமாட்டார்களா? உண்மைதான். ஆனால் இங்கே இப்புவியில் இவ்வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இம்மூன்று கேள்விகளிலிருந்து தப்பிக்கும் போராட்டத்திலேயே பெரும்பாலான மனிதர்கள் தங்கள் நாட்களை கழிக்கிறார்கள்.

1. நான் எங்கே இருக்கிறேன்?
2. அதை நான் எப்படி அறிவது?
3. நான் என்ன செய்யவேண்டும்?

மனிதனின் எல்லா எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும் அவன் தெளிவாக அறிந்திருப்பினும் இல்லையெனினும் இக்கேள்விக்கான பதில்களில்தான் அவையனைத்தும் அடங்கியிருக்கிறது.

இக்கேள்விகளை புரிந்துக்கொள்ளும் முதிர்ச்சியை அடையும் தருணத்தில் அதற்கான பதில்களையும் அறிந்திருப்பதாக மனிதர்கள் நம்புகிறார்கள்.

1. நான் எங்கே இருக்கிறேன்? - இந்நகரத்தில்
2. அதை நான் எப்படி அறிவது - கண்கூடாக தெரிகிறதே
3. நான் என்ன செய்ய வேண்டும்? - இங்கே தான் நிச்சயமற்றுப்போகிறார்கள். ஆனால் பொதுவான பதில் என்னவென்றால் ‘எதை எல்லோரும் செய்கிறார்களோ அதையே’

பிரச்சனை என்னவென்றால் அவர்கள் சுருசுருப்பாக இல்லை, திடமான நம்பிக்கையோடில்லை, சந்தோஷமாக இல்லை, சில சமயங்களில் விலகவோ விட்டுத்தொலைக்கவோ முடியாத காரணமற்ற பயத்தையும் விவரிக்கமுடியாத குற்ற உணர்வையும் அனுபவிக்கிறார்கள்.

கஷ்டங்கள் அனைத்தும் பதிலளிக்கப்படாத இம்மூன்று கேள்விகளில் இருந்து தொடங்குகிறதென்ற உண்மையை அவர்கள் எப்போதும் கண்டுணரவில்லை. ஒரே ஒரு அறிதல்முறை மட்டுமே அவர்களுக்கு பதிலை தரமுடியும் : தத்துவம் (philosophy).

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் I

அயன் ராண்ட் 1974ல் ஒரு ராணுவ பயிற்சிப்பள்ளியில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு Philosophy : Who needs it என்ற தலைப்பில் அளித்த உரையினை மொழிபெயர்க்கும் முயற்சி இது.

தத்துவம் : யாருக்கு தேவை - அயன் ராண்ட்
ராணுவ பயிற்சிபள்ளியில் பட்டம்பெறும் மாணவர்களுக்கு அயன்ராண்ட் ஆற்றிய உரை - மார்ச் 6, 1974

நான் ஒரு கதாசிரியர் என்பதால் ஒரு கதையிலிருந்தே என்னுரையை தொடங்குகிறேன்.

நீங்கள் ஒரு விண்கலவீரர் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் விண்கல ஓடம் கட்டுப்பாட்டை இழந்து தெரியாத ஏதோ ஒரு கோளில் விழுந்து நொறுங்குகிறது. சுயநினைவு திரும்பும் போது உங்களுக்கு அவ்வளவு கடுமையான காயமெதுவும் படவில்லையென அறிகிறீர்கள். அப்போது உங்கள் மனதில் எழும் முதல் மூன்று கேள்விகள் இவையாக இருக்கும்.

1. நான் எங்கே இருக்கிறேன்?
2. இதை நான் எப்படி கண்டுபிடிப்பது?
3. நான் என்ன செய்ய வேண்டும்?

வெளியே, அறிப்படாத பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பதை பார்க்கிறீர்கள். சுவாசிக்க காற்றும் உள்ளது. சூரியஒளி உங்கள் ஞாபகத்தில் உள்ளதைவிட மங்கலாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பது போலுள்ளது. வானத்தை பார்க்க எத்தனிக்கிறீர்கள். ஆனால் பார்க்காமல் திரும்பிக்கொள்கிறீர்கள்.

சட்டென்று தோன்றிய ஒர் எண்ணத்தால் தாக்கப்படுகிறீர்கள் - வானத்தை பார்க்காமல் இருந்தால் பூமியை விட்டு வெகு தூரத்தில் இருக்கிறீர்கள் என்றோ, திரும்பிச்செல்ல இயலாதென்றோ அறியாமல் இருந்துவிடலாம். இது தெரியாமல் இருக்கும் வரை உங்கள் இஷ்டம் போல எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்துக்கொள்ளலாம். பனிமூட்டமான, இனிமையான அதே சமயம் ஒரு குற்றவுணர்வும் கொண்டதுமான ஒரு வகையான நம்பிக்கையை அனுபவிக்கிறீர்கள்.

பார்வையை உங்களிடம் உள்ள பொருட்களின் பக்கம் திருப்புகிறீர்கள். அவையெல்லாம் சேதப்பட்டிருக்கலாம். எவ்வளவு தூரம் சேதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கவில்லை. சட்டென்று தோன்றிய பயத்தால் பார்ப்பதை நிறுத்திவிடுகிறீர்கள். இப்பொருட்களை நம்பி எப்படி பயன்படுத்துவது? இக்கருவிகள் கோளாராகாது என்று எப்படி நிச்சயப்படுத்திக்கொள்வது? இக்கருவிகள் வேற்று உலகத்தில் சரியாக வேலை செய்யுமா? உடனே பொருட்களிலிருந்தும் பார்வையை அகற்றி விடுகிறீர்கள்.

ஏன் எதைச்செய்யவும் இப்போது ஆர்வமில்லை என்று ஆச்சிரியப்படுகிறீர்கள். எதாவது எப்படியாவது தானாக நிகழ்வதற்கு காத்திருப்பதே பாதுகாப்பானது எனத்தோன்றுகிறது. விண்கல ஓடத்தை அசைக்காமல் இப்படியே இருப்பதுதான் நல்லதென எண்ணுகிறீர்கள். வெகுதொலைவில் உயிருள்ள ஒருவகையான ஜீவராசிகள் உங்களை நோக்கிவருவதை பார்க்கிறீர்கள். அவர்கள் மனிதர்களா எனத்தெரியவில்லை, ஆனால் இரண்டு கால்களுடன் நடந்து வருகிறார்கள். நிச்சயம் அவர்கள் உங்களிடம் வந்து நீங்கள் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுவார்களென தீர்மானிக்கிறீர்கள்.

பிறகெப்போதும் உங்களை பற்றிய தகவல்களே இல்லை.

ஓஷோ சிந்தனைகள்

இயற்கையாக, அமைதியாக உள்நோக்கியபடி வாழுங்கள், நீங்க நீங்களாக, தனிமையாக, அமைதியாக உங்கள் மன ஓட்டத்தை கவனித்தவாறு சிறிது நேரம், தினசரி இருக்க முயற்சி செய்யுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் எண்ண அலைகள் குறைய ஆரம்பிக்கும். ஒரு நாள், உங்கள் மனம் அமைதியாகி எண்ணம் அனைத்தும் நின்றுவிடும். அந்த அமைதியில், நிசப்தத்தில் மனம் காணாமல் போய்விடும். அப்பொழுது நீங்கள் அங்கே இருக்கமாட்டீர்கள்.

அதுவுரை நீங்கள் என்று கருதி வந்தது உங்கள் மனதைத்தான் என்பதை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள்.

மீண்டும் புல் தானாகவே வளருகிறது - ஓஷோ

நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.

இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?

நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான். இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது, அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே.

-ஓஷோ

ஞானத்திற்கும் அப்பால் - ஓஷோ

வாழ்க்கை மீண்டும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்பது நிச்சயமில்லை. இந்தமுறை அது ஏன் தரப்பட்டுள்ளது என்பதில் கூட நிச்சயமில்ல. நீ அதற்குத் தகுதியானவனா? அதை நீ சம்பாதித்திருக்கிறாயா? உயிர் வாழ்தல் அதை உனக்கு கொடுக்கக் கடமை பட்டுள்ளதா? அது ஒரு சுத்தமான பரிசு, உயிர் வாழ்தலின் அதிகமான நிறைவின் மூலம் வரும் பரிசு.

நீ அதற்குத் தகுதியானவனா இல்லையா என்றெல்லாம் அது கவலைப்படுவதில்லை. அது உனது தகுதிகளை பற்றிக் கேள்வி கேட்பதில்லை. உனது நன்னடத்தை ஒழுக்கம் இவை பற்றி விசாரிப்பதில்லை. உன் மீது எந்த வேண்டுகோளையும் விதிப்பதில்லை, எந்தவிதமான விதிமுறைகளும் இன்றி வெறுமனே அது உனக்குத் தரப்படுகிறது.

இந்தப்பரிசு ஒரு வணிகரீதியானது அல்ல. உன்னிடம் எந்தவித எதிர்ப்பார்ப்புகளையும் அது பதிலுக்குக் கேட்பதில்லை. உன்னிடம் அதை கொடுத்து நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று முழு சுதந்திரத்தையும் அது அனுமதிக்கிறது.

- ஓஷோ