31 மார்., 2009

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் III

மனிதனின் இருத்தலுக்கான அடிப்படை இயல்பையும், இருத்தலுடனான மனிதனின் தொடர்பையும் தத்துவும் ஆராய்கிறது. விசேஷ அறிவியல் (Special Sciences) சில கூறுகளையே ஆராயும் நிலையில் தத்துவமோ பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் தொடர்புள்ள கூறுகளை ஆராய்கிறது. அறிதலின் பரப்பில், விசேஷ அறிவயல் மரங்களெனில் தத்துவமோ செழிப்பான காடு உருவாகும் சாத்தியத்தை உண்டாக்கும் மண்.

உதாரணத்திற்கு தத்துவம் நீங்கள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கும் வழியை கொடுக்குமே தவிர நீங்கள் எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லாது. அவை உங்களுக்கு கூறுவது இவற்றை தான் :

1. நீங்கள் இருக்கும் பிரபஞ்சம் இயற்கைவிதிகளுக்கு உட்பட்டு இருக்கின்றதா…அதனால் மாற்றமுடியாததாகவும், திடமானதாகவும், நிச்சயத்தன்மையோடும் அறிந்துக்கொள்ளும்படியாகவும் இருக்கின்றதா? அல்லது வார்த்தைகளால் விளக்கமுடியாத குழப்பங்களோடு, புரிந்துக்கொள்ளமுடியாத அதிசய தேசத்தில், கணிக்கமுடியாத, அறியமுடியாத தொடர்மாற்றங்களுடன் உங்கள் மனதால் விளங்கிக்கொள்ள முடியாத இடத்தில் இருக்கின்றீகளா?

2. உங்களைச்சுற்றி நீங்கள் காணும் அனைத்தும் நிஜமானதா அல்லது அவையெல்லாம் மாயமா?

3. அவையெல்லாம் பார்வையாளனிலிருந்து தனித்து இயங்குகிறதா அல்லது பார்வையாளனால் உண்டாக்கப்பட்டதா?

4. அவை பொருளா அல்லது மனித உணர்வின் எண்ணமா?

5. அவை எப்படி இருக்கின்றதோ அப்படியேதானிருக்குமா அல்லது நம் உணர்வினால் நம் விருப்பப்படி மாற்றி அமைக்கக்கூடியதா?

நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பதில்களின் தொகுதிக்கேற்ப உங்கள் செயல்களின் இயல்பும் உங்கள் விருப்பங்களின் இயல்பும் வித்தியாசப்படும். இப்பதில்கள்தான் metaphysicsயின் தளம் - இருத்தலை உள்ளவாரே ஆராய்தல் அல்லது அரிஸ்டாடலின் வார்த்தைகளில் ‘இருப்பதை இருப்பதாகவே புரிந்து கொள்ளுதல் (being qua being) - இதுவே தத்துவத்தின் அடிப்படை கிளையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக